Sep 2, 2011

சூரிய கறைகள்

தலைப்பைப் பார்த்து தமிழ்நாட்டு அரசியல் சார்ந்த பரபரப்பிலக்கிய கட்டுரையோ என்று எதிர்பார்க்காதீர்கள். அவ்விஷயங்களில் அறிவார்த்தமான கருத்துகள் என்னிடம் இல்லை. நாளை மற்றொரு நாளே; இதுவும் மற்றொரு அறிவியல் கட்டுரையே.
ஸன் ஸ்பாட் என்பதை சூரிய கறை என்கிறேன். சூரிய புள்ளி, சூரிய பொட்டு என்றெல்லாம் தமிழாக்குவதற்கும் சார்ந்த கலைச்சொல்லாராய்ச்சி விவாதங்களில் நடுநிலை வகிப்பதற்கும் தற்போது ஒழியவில்லை. தொடருவோம்.
சூரிய கறைகளுக்கு அல்பாயுசு. சுமார் இருபது அல்லது முப்பது நிமிடங்களில் உருமாறிவிடும். தோன்றிய வேகத்தில் அழிந்தும் விடலாம்.  தோன்றி உருமாறி மறைகையிலேயே அவற்றை சுடச்சுட நேரிடையாக படம்பிடித்து சென்ற வாரம் (ஏப்ரல் 2011) நாஸா வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். முதலில் அதை பார்த்துக்கொள்ளுங்கள்.


வீடியோ சுட்டி. http://youtu.be/U0Lt3SgiEQ8
வீடியோவில் சூரியனின் மேற்பரப்பு அக்னிக்குழம்பாக. ஊடே கருப்பாக சிறு சுழல்கள் போல் தெரிவது சூரியனின் பரப்பில் தோன்றி இடம்மாறும் சூரிய கறைகள். பிரத்யேகமாக சூரியனை ஆராய்வதற்கான  நாஸாவின் ஸோலார் டைனமிக் அப்ஸர்வேட்டரி எனும் வின்கலத்திலிருக்கும் ஹெலியோஸீஸ்மிக் அண்ட் மேக்னெட்டிக் இமேஜர் எனப்படும் டெலஸ்கோப் காமிரா இரண்டு வாரம் தொடர்ந்து அவுட்டோர் ஷூட்டிங்காய் புவியொருமித்தசுழற்சிப்பாதையில் (ஜியொஸிங்க்ரொனஸ்), சூரியனுடன் சுற்றிப் படம்பிடித்து அனுப்பியது.

படத்திலிருப்பதுதான் நாஸாவின் எஸ்.டி.ஓ. HMI என்று குறிப்பிட்டிருப்பது ஹெலியோஸீஸ்மிக் அன்ட் மேக்னெட்டிக் இமேஜர் எனப்படும் டெலஸ்கோப் காமிரா. மேலும் தகவல்கள் நாஸாவின் http://sdo.gsfc.nasa.gov/ வலைதளத்தில்.
சூரிய கறைகள் ஏன் ஏற்படுகிறது என்பது இன்னமும் முழுவதுமாக நமக்கு புரியவில்லை. அணுமானிப்புகளை ஒட்டிய வானியளாலர்களின் கூற்றுபடி சூரியக்கறை என்பது சூரியனில் ஏற்படும் வெப்ப சலனங்களும் காந்தப் புயல்களும் கலந்து செய்த கலவை. ஆயிரம் மைல் சைஸில், சுமார் 4000 முதல் 5000 கெல்வின் வரை வெப்பநிலையிலிருக்கும், பிளாஸ்மா நிலையிலுள்ள மேட்டர் சுழன்றடிக்கும் ராட்சஸ மின்காந்த சூறாவளி.
சூரிய கறைகளுக்கு முன் சூரியனின் வெப்ப சலனம் பற்றி.
வெப்ப சலனம், கன்வெக்‌ஷன் என்பதின் தமிழ். உடனடியான உதாரணம் சூடான காற்று, புகை, புவியீர்ப்பு விசையை எதிர்த்து தன்னிச்சையாக மேலெழும்புவது வெப்ப சலனம். அடுப்படிவரை சென்றிருந்தால், பாத்திரத்தினுள் தேமேனென்றிருக்கும் நீரை அடுப்பில் மிதமாக சூடுபடுத்துகையில்  தன்னிச்சையாக அது பாத்திரத்தில் கீழிருந்து மேலாக சுழலுவதை கவனித்திருப்போம். இதுவும் புவியீர்ப்பு திசையை எதிர்த்து மேலெழும்பும் வெப்ப சலனம்தான். அறிவியல் பரிபாஷையில் வெப்பத்தினால் உந்தப்பட்ட தன்னிச்சையான திரவ ஓட்டத்தை நேச்சுரல் அல்லது ப்ரீ கன்வெக்ஷன் (natural or free convection) என்பர்.
காற்று, தண்ணீர் மற்றுமின்றி அநேக திரவங்களுக்கு வெப்பமூட்டுகையில் புவியீர்ப்பு திசையை எதிர்த்து மேலெழும்பும் இத்தன்மை இருக்கிறது. சூடான திரவத்தின் அடர்த்தி அதனை சுற்றியுள்ள மற்ற பகுதிகளின் அடர்த்தியிலிருந்து குறைகிறது. இதனால் மற்ற பகுதிகளை காட்டிலும் அடர்த்தி குறைந்த திரவத்தின்மேல் புவியீர்ப்பு விசையின் ஆதிக்கம் கம்மியாகி, அதனை அடர்த்தி அதிகமுள்ள திரவபகுதிகளினூடே மேலெழும்பச்செய்கிறது. இதனை மிதவு விசை (buoyancy force) என்பர். மேலே சென்ற வாயு விட்டுச்சென்ற வெற்றிடத்தை சுற்றிலும் அருகிலிருக்கும் அடர்த்தி அதிகமுள்ள வாயு நிரப்பிவிடும். வாயுமட்டுமில்லை, அடுப்பில் மிதமாக சூடாக்கப்படும் தண்ணீர் பாத்திரத்தின் அடியிலிருந்து மேலாக தன்னிச்சையாக சுழலுவதற்கும் இதுதான் சுருக்கமான விளக்கம். இதோ ஒரு விளக்கப்படம்.

இதே வெப்ப சலனம்தான் சூரியனிலும் நடக்கிறது. ஆனால் தண்ணீரிலோ வாயுவிலோ இல்லை. சூரியனில் இவையிரண்டும் இல்லை. சூரியனில் அணுக்கரு உருக்கத்தின் விளைவாக ஏற்படும் மிக அதிக உஷ்ணத்தில் மேட்டர் முழுவதுமே திட, திரவ நிலைகளை கடந்த பிளாஸ்மா எனும் நிலையில். சில எலக்ட்ரான்களை இழந்த அயன் எனப்படும் நிலையிலிருக்கும் அணுக்களாலான மேட்டர். சூரியனின் மேற்பரப்பே கிட்டத்தட்ட 5800 கெல்வின் வெப்பநிலை. நடுசெண்டரில் பல்லாயிரம் கெல்வின்கள். சூடான காற்று வெப்ப சலனத்தினால் பூமியின் மேலெழும்புவதுபோல, சூரியனிலும் இந்த சூடான பிளாஸ்மா உள்ளிருந்து வளிக்கு, சூரியனின் புவியீர்ப்பை எதிர்த்து மேலெழும்புகிறது. ஆனால் அதிவேகமான அமளி ஓட்ட வெப்ப சலனத்தினால். (அமளியோட்டம் என்றால் டர்புலன்ஸ். அறிமுகம்.) பரப்பிற்கு வந்து குளிர்ந்து மீண்டும் சூரியனுக்குள் அமிழ்ந்துவிடுகிறது. இப்படி தொடர்ந்து ஏற்பட்டுகொண்டிருக்கும் பிளாஸ்மா சுழல்தான் சூரியனுக்குள் உண்டாக்கும் உஷ்ணத்தை பரப்புவரை கொண்டுவருகிறது.
(இடைச்சொருகல்: கிராவிட்டி என்பதை புவியீர்ப்பு என்று இன்றுவரை தமிழாக்கியுள்ளோம். இது சரியா? புவி என்பது பூமியை மட்டும் குறிக்கும் சொல்லாகிறதே, ஆனால் மேலே சொன்னபடி, சூரியனிலும்தான் கிராவிட்டி இயங்குகிறது, சூரியயீர்ப்பு என்றால் கிராவிட்டி விளக்கத்திற்கு அநாவசியமாகிறதே. பூமி தாண்டி அறிவியலை தமிழில் வளர்த்துக்கொள்ளமாட்டோம் என்று முதலிலேயே யோசிக்காமல் தமிழாக்கியதால் வரும் கோளாறோ? சற்று உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து, கிராவிட்டி என்றே மூதறிஞர்கள் ”தமிழாக்கி” விட்டிருக்கலாமோ?)
உள்ளிருந்து பரப்புவரை வெப்பசலனத்தினால் சுழன்றுகொண்டிருக்கும் பிளாஸ்மா தவிர, ஸோலார் ப்ராமினன்ஸ் எனப்படும் தீடீர் வெளியேற்றங்களும் உண்டு. ஸோலார் ப்ராமினன்ஸ் என்றால் சூரிய கற்றை எனலாம். வெறும் ஒளிக்கற்றை இல்லை. சொக்கபனையில் ஏற்படும் தீஜ்வாலைகளை பார்த்திருப்போம். அவை அமளியோட்டத்தினால் நர்த்தனமாடி மேலெழும்பிக்கொண்டிருக்கும் ஒளியடங்கிய உஷ்ணத் தீஜ்வாலைகள், கற்றைகள். அதுபோலவே மண்ணுக்கும் வின்னுக்குமாய் ஓங்கி உலகளந்த உத்தம சூராவளியாக த்ரிவிக்ரமாவதார சைஸில் சுழன்று சூரியனிலிருந்து சில வேளைகளில் சில பகுதிகளில் அதன் பரப்பை கடந்து வானத்திற்கு தாவி பிளாஸ்மா மேலெழும்புகிறது. கொளுத்தப்பட்டுவிட்ட தீபாவளி வெடிக்குப்பையில் திடீரென்று பற்றி எறிந்து பீய்ச்சும் ஒரு புஸ்வானம் போல சூரியபரப்பிலிருந்து வெளிக்கிளம்பும் இவ்வகை பிளாஸ்மா புஸ்வானம், மொத்தமாக சூரியனின் புவியீர்ப்பை விட்டு வெளியேறமுடியாமல் வெளிப்புறத்திற்கு பீய்ச்சியடிக்கப்பட்டதால் குளிர்ந்து மீண்டும் சூரியனுள் வேறு இடத்தில் விழுகிறது. இதுதான் ஸோலார் ப்ராமினன்ஸ் அல்லது சூரிய கற்றை.
அருகில் பாத்து ரசிக்கவேண்டுமா. இதோ சென்ற வாரம் (ஏப்ரல் 2011இல்) நாஸாவின் அதே எஸ். டி. ஓ .வின் டெலஸ்கோப் படம்பிடித்த ஒரு பிரமிப்பான வீடியோ.
சுட்டி — http://www.youtube.com/watch?v=6voI4wQzS7Y
வீடியோவில் பார்க்கையில் ஏதோ சிகரெட் புகை வளையம்போல, காற்றிலாடும் முடிக்கற்றை போலத் தோன்றும் இந்த ராட்சஸ சூரிய பிளாஸ்மா வளையங்கள் எவ்வள வு பெரிதென்றால், சூரிய பரப்பிலிருந்து வளையத்தின் உச்சிக்கான இடைவெளியில் அஸால்டாய் நம் பூமியையே நுழைத்துவிடலாம். கிட்டத்தட்ட 44000 மைல் உயரமாம். அகலமோ, அதாவது பிராமினன்ஸ் வளையம் சூரியனின் பரப்பில் தோன்றி விழும் பகுதிகளூக்கிடையேயான தூரமோ, சூரியமண்டலத்திலேயே பெரிதான வியாழன் கிரகத்தைவிட பெரிய சைஸ். பீய்ச்சப்படும் வேகமோ நொடிக்கு 600 முதல் 1000 கிலோமீட்டர் வரையாம்.ப்ராமினன்ஸ்களின் ஆயுசு நம் ஒரு நாள். மீண்டும் சூரியனுள் விழுந்து அடங்கிவிடுகிறது. பிறகு வேறு பகுதியில் தொடரும்.
(வீடியோவில் இதன் ஒரு நாள் ஆயுளை ஃபாஸ்ட்ஃபார்வேர்டாய் சில நொடிகளுக்குள் சுருக்கிவரைந்திருக்கிறார்கள்)
சூரிய கறை, சூரிய கற்றை இரண்டிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் கற்றை சராசரியான சூரிய பரப்பிலிருந்தும் விடுபட்டு வீடியோவில் பார்த்தது போல பல்லாயிரக்கணக்கான மைல்கள் எழும்பி பெரிய வளையமாக பிரயாணித்து மீண்டும் சூரியனுக்குள் விழுவது. சூரிய கறைகள் வெப்ப சலனத்தினால் உள்ளிருந்து பரப்புவரை சுழலும் பிளாஸ்மா ஓட்டத்தின் சூரிய பரப்பில் குளிர்ந்த ஒரு பகுதி. இதை மேலும் விளக்குவோம்.
சூரியனின் மேற்பரப்பில் எப்படி பிளாஸ்மா குளிருகிறது என்றால், அதுதான் நமக்கு வெய்யில். அதாவது சூரியக்கதிர்களாக மின்காந்த கதிரியக்கமாக வளியில் உஷ்ணம் விசிறப்படுகிறது. சுமார் எட்டு நிமிடத்திற்கு பிறகு ஒரு பகுதி பூமிதொட்டு வெய்யிலாக நம்மை வாழவைக்கிறது, வியர்க்கவைக்கிறது, வியக்கவும் வைக்கிறது.இவ்வாறு என்திசையிலும் சூரியனின் உஷ்ணம் செலவாகி, மேற்பரப்பில் பிளாஸ்மா புயல் சற்று குளிர்கிறது. தொடர்ந்து இவ்வகை சூறாவளிகள் சூரியனில் அனைத்து இடங்களிலும் நடந்தபடி.
இடையே ஆங்காங்கே லோக்கலாக திடீர் திடீரென்று காந்த அலைகள் சூரியனின் உள்ளிருந்து ஆரமாக மேலெழும்பி மீண்டும் உள்ளே விழுகிறதாம். வீட்டிலுள்ள சிறு காந்தத்தின் தென் வட துருவங்களுக்கிடையே ஏற்படும் காந்தவிசைக்கதிர்கள் போல, சூரியனையே காந்தமாக கருதி அதன் இருபுலன்களுக்கிடையே இக்கதிர்களை யோசித்துப்பாருங்கள். இக்காந்த அலைகள் மேற்படி வெப்ப சலனத்தினால் சுழன்றுகொண்டிருக்கும் பிளாஸ்மா தூண்களுக்கிடையே ஊடுருவுகையில் மேட்டர் தலைகால் புரியாத கந்தலாகிவிடுகிறதாம்.புரிவது என்னவேன்றால்,இந்த காந்தவிசை சூரியனில் வெப்ப சலனத்தை மட்டுபடுத்துகிறது. அதனால், சூரியனின் உள்ளிருந்து வெளியே பீய்ச்சியடிக்கப்படும் பிளாஸ்மா சற்று வேகம் குறைந்துவிடுகிறது. ஏற்கனவே பரப்பில் குளிர்ந்து சாதாரணமாக மீண்டும் வெப்ப சலனத்தினால் சூரியனின் உள்ளே சென்றிருக்க வேண்டிய  பிளாஸ்மா பகுதிகளை, இந்த வேகம் குறைந்துவிட்ட வெளிவந்துகொண்டிருக்கும் பிளாஸ்மா பகுதிகள் உள்ளே வரவிடாமல் தாங்கிப்பிடித்துவிடுகிறது.
இ ப்படி ஆங்காங்கே சூரியனின் பரப்பில் குளிர்ந்து, பரப்பிலேயே தேங்கிவிட்ட பிளாஸ்மா பகுதிகள்தான் சூரியக்கறைகள். சூடான எண்ணையில் பொறிந்து, மீண்டும் இலுப்பைசட்டியினுள் அமிழமுடியாமல் மேலெழும்பும் மெதுவடையை மனதில்கொள்ளுங்கள்.
இதோ சூரிய கறையின் ஒரு குளோஸப் ஷாட்.

படத்தில் கருப்பாக இருக்கும் திட்டுதான் சூரிய கறை. சைஸ் பல்லாயிரம் மைல்கள் பரப்பளவு. கிட்டத்தட்ட 4000 முதல் 5000 கெல்வின் வரை வெப்பநிலை. ஆயுசோ சில மணிநேரங்களே. அதற்குள் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த காந்தபுயலின் திசை, விசை மாறி, தாங்கிப்பிடிக்க கீழே மேட்டரின்றி, குளிர்ந்த பிளாஸ்மா மீண்டும் சூரியனுள்ளே கொட்டிவிடும்.மேற்பரப்பில் நாம் டெலஸ்கோப் வைத்து படம்பிடித்துக்கொண்டிருக்கும் கறை கருப்பு கலர் கரைந்து, மறைந்துவிடுகிறது.
அவ்ளோ ’ஹீட்’டுனா கறை ஏன் கருப்பு கலராகீது? கறை சராசரியாக 4500 கெல்வின் வெப்பநிலை என்றால், சுற்றிலும் உள்ள மற்ற சூரிய பரப்பு இதைவிட அதிகமான  5800 கெல்வின் வெப்பநிலையில் இருக்கிறது.கிட்டத்தட்ட ஒரு 1000 கெல்வின் வெப்பநிலை வித்தியாசம். இதனால் அருகருகே இருக்கும் இவ்விரு பகுதிகளிலிருந்தும் வெளிப்படும் கதிரியக்கத்தின் அளவு வெகு அதிகமாக மாறுபடும். (பள்ளிப்பாடத்தில் ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் உஷ்ணக்கதிரியக்கம் அதன் வெப்பநிலையின் நான்காம் படியை, அடுக்குக்குறியை — raised to power 4 — சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம்.) இந்த கதிரியக்க வெளிப்பாட்டு வித்தியாசத்தினால்தான் டெலஸ்கோப்பில் பார்த்து படம்பிடிக்கும் இந்த கறைகள்,அருகிலிருக்கும் சூரியப்பகுதிகளைவிட ஒளிகம்மியாகி, நமக்கு கருப்பு கறையாக தெரிகிறது.
சூரிய கறைகளாலும் கற்றைகளாலும் பூமியில் வசிக்கும் நமக்கு நேரிடையாக பாதிப்பு ஒன்றும் இல்லை. இவற்றின் தோற்றம் அதிகரிக்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளின் வீரியம் அதிகமாகிறது எனத்தெரிகிறது. இதனால் பூமியில் அரோரா எனப்படும் துருவப்பிரதேசங்களில் ஏற்படும் பிரகாசமான மின்காந்தப்புயல்கள் அதிகரிப்பதாக தெரிகிறது. இதற்குமேல் யோகம், உபயோகம் பொருத்திருந்து அறிவோம்.
சான்றேடுகள்/சுட்டிகள்
1.  நாஸா எஸ்.டி.ஓ. வின்கலன் பற்றி http://sdo.gsfc.nasa.gov/
2.  சூரிய கறை பற்றி மேலும் http://www.universetoday.com/42259/what-is-a-sunspot/
3.  சூரிய கற்றை பற்றி மேலும் http://solar.physics.montana.edu/ypop/Program/hfilament.html
4.  வெப்ப சலனம் பற்றி http://wp.me/pJjFi-3p
5.  அமளி ஓட்டம் –- டர்புலன்ஸ் – அறிமுகம் http://wp.me/pJjFi-cc
6.  சூரியனில் அமளி ஓட்டம் http://wp.me/p15OrA-1

நன்றி:அருண்

No comments:

Post a Comment